நீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலையை சீரமைக்கும் பணி

நெடுஞ்சாலைத்துறை சார்பில் நீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது.
நீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலையை சீரமைக்கும் பணி
Published on

நீடாமங்கலம்:

நெடுஞ்சாலைத்துறை சார்பில் நீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது.

சாலையின் இருபுறமும் பள்ளங்கள்

நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படும்போது நீடாமங்கலம் பழைய நீடாமங்கலம் சாலையில் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகம் செல்கின்றன. இதனால் இந்த சாலையின் இருபுறமும் பள்ளங்கள் ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படும் அபாய நிலையில் இருந்தது. எனவே சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் பிப்ரவரி 7-ந்தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீடாமங்கலம் தாசில்தார் தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அந்த சாலையின் இருபுறமும் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனால் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறைக்கு பாராட்டு

தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் சொன்ன தேதியில் அந்த சாலையில் வேலை நடைபெறாததால் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து நீடாமங்கலம்- பழைய நீடாமங்கலம் சாலையில் இருபுறமும் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஓரளவிற்கு சிரமமில்லாமல் சென்று வரமுடியும். அதையடுத்து கோரிக்கையை செயல்படுத்தி வரும் நெடுஞ்சாலை துறையினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் இந்த சாலையில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், இந்த சாலையின் இருபுறமும் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை விரிவாக்கம் செய்து நீடாமங்கலம்- பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நெடுஞ்சாலைத்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com