மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஊசிகள் கண்டெடுப்பு: ஊக்க மருந்து ஊசிகளா? போலீசார் விசாரணை

மாநில அளவிலான தடகள பேட்டிகள், மாணவிகளுக்கான ஆக்கி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின.
ஊசிகள்
Published on: 

மதுரை,

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்த நிலையில் வீரர்கள் கழிவறைகளில் கிடந்த ஊசிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இது ஊக்க மருத்துக்காக பயன்படுத்தியதா? என விசாரணை நடக்கிறது.

ரேஸ்கோர்ஸ் மைதானம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான தடகள பேட்டிகள், மாணவிகளுக்கான ஆக்கி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. இப்போட்டிகளை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார்.

இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

கழிவறையில் ஊசிகள்

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்துகின்றனர். நேற்று காலை கழிவறை பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்தன. அந்த ஊசிகளை பயன்படுத்தியவர்கள் அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல், கழிவறை மற்றும் மக்கள் நடமாடும் பகுதிகளிலேயே வீசிச்சென்று உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு சென்று பார்வையிட்டார். மேலும் தல்லாகுளம் போலீசிலும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு, அங்கு கிடந்த 7 ஊசிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஊக்க மருந்தா?

விளையாட்டு வீரர்களுக்கான கழிவறைகளில் இந்த ஊசிகள் கிடப்பதற்கான காரணம் என்ன? அவற்றை யார் பயன்படுத்தியது? ஊக்க மருந்து ஊசிகளா? அல்லது வேறு மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும், விளையாட்டு மைதான வளாகத்தை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com