செயின், கம்மல், கிளிப்பை கழற்றி தலைவிரி கோலமாக தேர்வெழுதிய மாணவிகள்

மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 104 இடங்களில் இன்று நடைபெற்றது.
செயின், கம்மல், கிளிப்பை கழற்றி தலைவிரி கோலமாக தேர்வெழுதிய மாணவிகள்
Published on

தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள மையங்களில் நடக்கும் தேர்வில் 88 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை எழுதினர்.

நீட் தேர்வு எழுத வந்த மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாணவ, மாணவிகள் ஷூ, முழுக்கை சட்டை, டி&சர்ட், பெல்ட், கைக் கடிகாரம், குளிர் கண்ணாடிகள், செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ் உள்ளிட்ட ஆபரணங்கள், கிளிப், பெரிய பட்டன்கள், பேட்ஜ், பெரிய ரப்பர் பேண்ட், சேலை, வளையல், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்வு எழுத வந்த மாணவிகள் தேர்வு முழுதும் அறைக்குள் செல்லும் முன்பு தாங்கள் அணிந்து வந்திருந்த செயின், கம்மல்கள், மோதி ரங்கள், வளையல்கள், கைக்கெடிகாரங்கள் ஆகியவற்றை கழற்றி தங்கள் பெற்றோர்களிடம் கொடுத்தனர்.

தலையில் மாட்டிருந்த கிளிப், பெரிய ரப்பர்பேண்டுகளையும் கழற்றி தலைவிரி கோலமாக தேர்வு எழுதும் அறைக்குள் சென்றனர்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை அறியாமல் சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் வாலிபர் ஒருவர் முழுக்கை சட்டையுடன் தேர்வு எழுத வந்தார் அவரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க வில்லை. தேர்வு எழுத நேரம் நெருங்கியதால் வெளியில் சென்று வேறு அரைக்கை சட்டை வாங்கி வர நேரமில்லை. எனவே அந்த மாணவர் கத்தரிக்கோலால் சட்டையில் இருந்த முழுக்கை துணியை வெட்டி அரைக்கையாக மாற்றினார். அந்த சட்டையை அணிந்த படி அவர் தேர்வு எழுத சென்றார்.

பல்வேறு தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் இன்று நடைபெற்ற நீட் தேர்வு சர்ச்சைகளுடன் நிறைவடைந்து உள்ளது.

பல்வேறு இன்னல்களுக்கு இடையே தேர்வு எழுதிய மாணவர்கள் நீட் தேர்வு கடினமாக இருந்ததாக கருத்து தெரிவித்து உள்ளனர். நீட் தேர்விற்கு தயாராக போதிய நேரம் இல்லை என அரசு பள்ளி மாணவர்கள் கருத்து கூறிஉள்ளனர். தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com