மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி: ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூல் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி அளிப்பதாக கூறி தனியார் பள்ளிகள், பயிற்சி நிலையங்களுடன் சேர்ந்து ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி: ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூல் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூட்டணி அமைத்து கொள்ளை

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நம்பவைத்து கழுத்தை அறுத்ததாலும், இனி நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டதாலும், மருத்துவம் படிக்க விரும்பிய மாணவர், மாணவிகளிடையே தங்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியுமா? என்ற ஐயமும், அச்சமும் எழுந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகளும், தனிப்பயிற்சி நிலையங்களும் கூட்டணி அமைத்து மாணவர்களிடம் கொள்ளை அடிக்கத் தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு குழும தனியார் பள்ளிகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த வகுப்புகளை நடத்துகின்றன. இதற்காக அந்த நிறுவனங்களைச் சேர்ந்த வடஇந்திய ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் வழக்கமான பாடங்களுடன் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான நுழைவுத்தேர்வு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசு நடவடிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளியும் தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் தான் வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதும், பயிற்சியில் சேராத மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். இதை மத்திய, மாநில அரசுகளும், சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிகுலேசன் கல்வித்திட்ட இயக்குனரகமும் அனுமதிக்கக்கூடாது.

இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதற்கு எல்லாம் மூல காரணமாக அமைந்துள்ள நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்களிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com