நீட் மோசடி விவகாரம்: கைதான மாணவி மற்றும் அவரது தந்தைக்கு நிபந்தனை ஜாமின் அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்

நீட் மோசடி விவகாரத்தில் கைதான மாணவி மற்றும் அவரது தந்தைக்கு நிபந்தனை ஜாமின் அளித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் மோசடி விவகாரம்: கைதான மாணவி மற்றும் அவரது தந்தைக்கு நிபந்தனை ஜாமின் அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்
Published on

சென்னை,

மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் பெற்று 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவர மாணவி தீக்க்ஷா மற்றும் அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவி மற்றும் அவரின் தந்தையை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெரியமேடு போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் ஆஜராகாமல் பாலச்சந்திரன், தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். அவரை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, மாணவி தீக்ஷா மற்றும் அவரின் தந்தை பெங்களூரின் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரை பதுங்கியிருந்த இருவர் மீதும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து சிறையில் உள்ள தந்தையும் மகளும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் மனு மீதான விசாரணை நீதிபதி பாரதிதாசன் முன் வந்தது, அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலச்சந்திரன் 33 நாட்களாக சிறையில் உள்ளதாகவும், மனுதாரர்களின் செயலால் மற்ற மாணவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த வழக்கில் புலன்விசாரணை நடந்து வருகிறது. அறிக்கைக்கு காத்திருக்கிறோம். ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாரதிதாசன், இருவரையும் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு விட்டதால் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தீக்ஷாவின் தந்தை பாலச்சந்திரனுக்கு மட்டும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பெரியமேடு போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com