

சென்னை
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான நீட்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்றார். கலந்தாய்வின் போது அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது. அதன்படி, அவர் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவர் உதித்சூர்யா மீது மோசடி, சதித்திட்டம் தீட்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை நடத்தியதால், உதித்சூர்யா தனக்கு இங்கு படிக்க விருப்பம் இல்லை என்று கூறி தேனி மருத்துவக்கல்லூரியில் இருந்து வெளியேறி சென்றார். அதன்பிறகு அவர் கல்லூரிக்கு வரவில்லை.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உதித்சூர்யாவை பிடித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆள் மாறாட்டம் நடந்து இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மருத்துவ துறை அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தான் பதில் அளிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை. மத்திய அரசு தான் நடத்தியது. எனவே இதற்கு தமிழக அரசு காரணம் அல்ல. இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.