

குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே முதியவரை பக்கத்து வீட்டுக்காரர் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி கைப்பற்றிவிளையை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 86). இவருடைய மகன் ஜெபமணி (62). இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இவர்களுடைய பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆல்பர்ட் அஸ்வின் (38). மாற்றுத்திறனாளியான இவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வரும் போதெல்லாம் இந்த முதியவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனை தட்டிக்கேட்டதால் ஜெபமணிக்கும், ஆல்பர்ட் அஸ்வினுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு தொடர்ந்து ஆல்பர்ட் அஸ்வின் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் ஜெபமணி வேலையை முடித்து வீட்டுக்கு வந்த போது ஆல்பர்ட் அஸ்வின் அங்கு தங்களுக்கு சொந்தமான வீட்டின் சுவரை சேதப்படுத்தியதோடு ஜன்னல் கதவுகளையும் உடைத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கேட்டதால் வாய்க்கு வந்தபடி ஆபாச வார்த்தைகளால் ஆல்பர்ட் அஸ்வின் திட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன ஜெபமணி போலீசில் புகார் கொடுக்கப்போவதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றார். அதன்படி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பக்கத்து வீட்டுக்காரரின் அட்டூழியத்தை எடுத்துக் கூறி விட்டு வீட்டுக்கு வந்தார்.
அங்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தந்தை குழந்தைவேல், வீட்டில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். கருகிய தந்தையின் உடலை பார்த்து ஜெபமணி கதறி அழுதார்.
மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொல்லப்பட்ட குழந்தைவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், குழந்தைவேலுவை பக்கத்து வீட்டுக்காரர் ஆல்பர்ட் அஸ்வின் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அம்பலமானது.
ஏற்கனவே ஜெபமணி, குழந்தைவேல் மீது கோபத்தில் இருந்த ஆல்பர்ட் அஸ்வின் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆவேசத்தின் உச்சிக்கே சென்றார்.
வயதானவர்கள் தனக்கு எதிராக செயல்படுகிறார்களே? என மனதுக்குள் நினைத்த அவர், ஜெபமணியை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் போலீசில் புகார் கொடுக்கப் போவதாக அவர் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இதனை தொடர்ந்து ஜெபமணிக்கு தக்க பாடம் புகட்டுவதற்காக அவரது தந்தை குழந்தைவேலுவை கொல்லும் மனநிலைக்கு ஆல்பர்ட் அஸ்வின் சென்றுள்ளார்.
உடனே வீட்டுக்குள் புகுந்த அவர் சமையல் எண்ணெய்யை (பாமாயில்) குழந்தைவேல் மீது ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்று விட்டு அங்கிருந்து சென்று, வீட்டில் ஒன்றும் தெரியாதது போல் இருந்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ஆல்பர்ட் அஸ்வினை கைது செய்தனர்.
முதியவரை பக்கத்து வீட்டுக்காரர் எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.