நெல்லை: சாலையில் சண்டையிட்ட மாடுகள் முட்டியதில் கர்ப்பிணி உட்பட 3 பேர் காயம்

இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
நெல்லை: சாலையில் சண்டையிட்ட மாடுகள் முட்டியதில் கர்ப்பிணி உட்பட 3 பேர் காயம்
விபத்து
Published on: 

நெல்லை,

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் சாலையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

சாலையில் சண்டையிட்ட மாடுகள்

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அம்பை சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் நேரத்தில் அப்பகுதி சாலையில் 2 மாடுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக முட்டி மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

கர்ப்பிணி மீது மோதி விபத்து

அப்போது, அவ்வழியாகத் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள் திடீரென ஓடிவந்து, தம்பதியினரின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி முட்டின. இதில் நிலைதடுமாறிய கர்ப்பிணி உட்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இந்த விபத்தில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக 3 பேருக்கும் பெரிய அளவிலான காயமின்றி உயிர் தப்பினர்.

பொதுமக்கள் கோரிக்கை

இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சாலைகளில் கால்நடைகளை சுதந்திரமாகத் திரியவிடும் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள மாடுகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X