நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயருகிறது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயருகிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலை குற்றாலம் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது.

இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, இந்த அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாபநாசம், மணிமுத்தாறு, வள்ளியூர், ஆய்குடி, தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. நெல்லை, பாளை யங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது.

களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் விடிய, விடிய பலத்த மழை பெய்ததால் பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சிதம்பரபுரம் சாலையில் உள்ள தரைப்பாலமும், வனத்துறை அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள மூங்கிலடி தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கின. கீழகருவேலங்குளம் கீழப்பத்தை தரைப்பாலத்தையும் வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பச்சையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கீழ வடகரை பாலமும், பத்மநேரி நடைபாலமும் சேதம் அடைந்தன. தருவை அருகே பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை உடைந்தது.

களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

இட்டமொழி, பரப்பாடி, வடக்கு விஜயநாராயணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. இட்டமொழி ஊருணிகுளம் நிரம்பி மறுகால் சென்றது.

பலத்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மணிமுத்தாறு அணை பகுதியில் 29 செ.மீ. மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் 86.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 89.40 அடியாக உயர்ந்தது.

பாபநாசம் அணை பகுதியில் 16 செ.மீ. மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம், நேற்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 105.06 அடியாக அதிகரித்தது. இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 112.43 அடியாக உயர்ந்தது.

கடனாநதி, ராமநதி அணை, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல இடங் களில் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி, சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், உடன் குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

கனமழை பெய்ததால் தூத்துக்குடியில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பலத்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

சாத்தான்குளம் கருமேனி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெருவில் உள்ள 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசிப்பவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. அல்போன்ஸ் என்பவரின் வீட்டு சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆறுமுகநேரியில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின.

பெரியதாழையில் கடல் கொந்தளிப்பு காரணமாக, கடற்கரை அருகில் உள்ள சாலையை கடல் அலை அரித்துச் சென்றது. அந்த இடத்தை திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தடுப்பணை மூழ்கியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பலத்த மழை காரணமாக குளச்சலில் பெரும்பாலான கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மதுரை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மதுரை நகரில் மதியம் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, பேரையூர், சோழவந்தான், திருமங்கலம், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், திருவாடானை, தொண்டி, வட்டாணம், ஆர்.எஸ்.மங்கலம், தீர்த்தாண்டதானம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக லேசான பெய்தது.

திண்டுக்கல்லில் நேற்று காலை சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. கொடைக்கானலில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. கோகினூர் மாளிகை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்ததால் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கொடைரோடு, நிலக்கோட்டை, சாணார்பட்டி, வேடசந்தூர், பழனி பகுதிகளிலும் மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, கம்பம், பெரியகுளம், உத்தமபாளையம் உள்பட பல இடங்களில் லேசான மழை பெய்தது. மழை காரணமாக உப்புக்கோட்டை மாணிக்காபுரம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தற்போது சம்பா, தாளடி நெல் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்வது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று காலை மிதமான மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, அவினாசி பகுதிகளில் லேசான மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கொடுமுடி, ஊஞ்சலூர், சிவகிரி, அந்தியூர், மொடக்குறிச்சி, சென்னிமலை உள்ளிட்ட இடங்களில் நேற்று மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com