

நெல்லை,
நெல்லை மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் இரண்டாம் நிலை சிறைப் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்ட பகுதிகளில் சொகுசு காரைப் பயன்படுத்தி பெருமளவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நெல்லை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரில் கஞ்சா கடத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது . அதிலிருந்த 2 கிலோ கஞ்சா, 7 லட்சம் ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். உடனடியாக இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த இரண்டாம் நிலை சிறைப் போலீஸ் அதிகாரி தமிழரசன் மற்றொருவர் அவரது நண்பர் என்பது தெரிய வந்தது.
சட்டவிரோதமாகக் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த குற்றத்திற்காக சிறைப் போலீஸ் அதிகாரி தமிழரசன் மற்றும் அவரது நண்பர் மீது 1985 போதைப்பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நெல்லை மாநகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.