நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது; மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள வணிக செயல்பாடுகளை உடனடியாக மூடவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லை சங்கர்நகரை சேர்ந்த முத்துராமன் என்பவர் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாகங்கள் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை இன்றி கட்டப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி அங்குள்ள கடைகள், வாகன காப்பகம் திறக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த மாதம் 26-ந்தேதி இந்த பஸ் நிலையத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உரிய அனுமதியின்றி உணவகம், இருப்பு அறை, போக்குவரத்து ஓட்டுனர்கள் அறை திறக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து புகார் தெரிவித்த முத்துராமனுக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நெல்லை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பதில் அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், “சுற்றுச்சூழல் அனுமதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை போன்ற அரசு துறைகளின் அனுமதி இல்லாமல் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது. அங்கு திறக்கப்பட்டுள்ள வணிக செயல்பாடுகளை உடனடியாக மூடவேண்டும். இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு வழிகாட்டுதல்கள் வழங்க, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.






