நெல்லை: டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி அரசு ஊழியரிடம் ரூ.28.5 லட்சம் பறித்த கேரள கும்பல் கைது

கேரளத்துக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
டிஜிட்டல் கைது
கோப்புப்படம்
Published on: 

நெல்லை,

நெல்லையில் டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி அரசு ஊழியரிடம் ரூ.28.5 லட்சம் பறித்த கேரள கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்

நெல்லையைச் சேர்ந்தவர் அனந்தப்பன் (61 வயது). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 6-ந்தேதி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை, என்.ஐ.ஏ. போலீஸ் துறையின் மூத்த இன்ஸ்பெக்டர் சந்தீப்ராஜ் என்று அறிமுகம் செய்துள்ளார்.

பின்னர் அவரது செல்போன் எண்ணை பயன்படுத்தி 6 மாநிலங்களில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, நக்சல் தீவிரவாதிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ரூ.28.5 லட்சம் பறிப்பு

மேலும் மறுநாள் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் பேசிய அந்த நபர் போலீஸ் சீருடையில் காட்சி அளித்து, அனந்தப்பனை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி உள்ளார். மேலும் ஏ.ஜி.ஜி.பி. விஸ்வாஸ் என்பவர் உங்களை தொடர்பு கொள்வார் என்று கூறி அவரது வங்கிக்கணக்கு எண் மற்றும் சேமிப்புத்தொகை உள்ளிட்ட விவரங்களை வாங்கி உள்ளார். பின்னர் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.28.5 லட்சம் பணத்தை அனுப்பி மோசடி செய்துள்ளனர்.

மறுநாள் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது அழைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அனந்தப்பன் தன்னுடைய குடும்பத்தினரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரித்தபோது ஆன்லைன் மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.

கேரள கும்பல் கைது

இதையடுத்து இதுதொடர்பாக நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அனந்தப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கேரளம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளத்துக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று மோசடியில் ஈடுபட்ட எர்ணாகுளம் நெடுவெளிகாட்டை சேர்ந்த ரவிக்குமார் (52 வயது), விஸ்வபுரத்தை சேர்ந்த தினேஷ் (52 வயது), கண்ணூர் மாவட்டம் எடக்காடு பகுதியை சேர்ந்த அப்துல் சமது (50 வயது) ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com