நெல்லை கல்குவாரி விபத்து; உயிரிழப்பு 2 ஆக உயர்வு

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.
நெல்லை கல்குவாரி விபத்து; உயிரிழப்பு 2 ஆக உயர்வு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் அள்ளும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 14ந்தேதி இரவு சுமார் 400 அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, திடீரென பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளைய நயினார்குளத்தை சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அங்கு நின்ற 3 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்களும் பாறைகளில் சிக்கி நொறுங்கின.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கயிறு மூலம் குவாரிக்குள் இறங்கி 6 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ராமேசுவரத்தில் இருந்து இந்திய கடற்படை பருந்து ஹெலிகாப்டர் மீட்பு பணிக்கு வந்தது. ஆனால் மீட்பு பணியில் ஈடுபடுத்த முடியாததால் ஹெலிகாப்டர் திரும்பி சென்றது. தொடர்ந்து நாங்குநேரி, பேட்டை, நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது இடிபாடுகளில் சிக்கி லேசான காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், விஜய் ஆகிய 2 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3வது நபர் செல்வம் பத்திரமாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், அந்த தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். கல்குவாரியில் இருந்து 4வது நபராக மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளியான முருகன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

நாங்குநேரி அருகே உள்ள ஆயன்குளம் பகுதியை சேர்ந்தவரான முருகன் லாரி கிளீனர் ஆவார். இதனால், கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com