நெல்லை: விபத்தை ஏற்படுத்திவிட்டு வாக்குவாதம் செய்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வீடியோ வெளியான நிலையில், உதவி ஆய்வாளர் காந்திராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை: விபத்தை ஏற்படுத்திவிட்டு வாக்குவாதம் செய்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார்.

உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானநிலையில், அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட காந்தி ராஜன் மீது துறைரீதியாக நடவடிக்கை பாயுமென தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com