

நெல்லை,
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை 2-வது அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நாகர்கோவில் டவுன்- இரணியல் இடையே இரட்டை ரெயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்த உள்ளார்.
இதையொட்டி பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதுடன், சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒருசில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
இதையொட்டி மதுரை -புனலூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16729) இன்று (சனிக்கிழமை) மட்டும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் புனலூர் -மதுரை எக்ஸ்பிரஸ் (16730) நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 30-ந்தேதி நெல்லையுடன் நிறுத்தப்படும். நெல்லை -திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து திருச்சிக்கு குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்லும்.
வழித்தடம் மாற்றம்
நெல்லை -பிலாஸ்பூர் (22620) அதிவிரைவு ரெயில் 29-ந்தேதி தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம் செண்டிரல் போதாது.
இதேபோல் நெல்லை -ஜாம்நகர் ரெயில் (19577) 30-ந்தேதி தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக இயக்கப்டுகிறது. வள்ளியூர், நாகர்கோவில் டவுன், பாரசாலா, திருவனந்தபுரம் சென்டிரல் செல்லாது. தென்காசி, செங்கோட்டை, புனலூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.