நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பாரம்பரியம்-அறிவியல் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்ததே புதிய கல்விக்கொள்கை

பாரம்பரிய கல்வி-அறிவியல் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்ததே புதிய கல்விக்கொள்கை என்று நெல்லை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பாரம்பரியம்-அறிவியல் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்ததே புதிய கல்விக்கொள்கை
Published on

நெல்லை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று 28-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் பிச்சுமணி வரவேற்று பேசினார். திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைவுப்புல கழக இயக்குனர் அஜயகோஷ் பட்டமளிப்பு உரையாற்றினார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்தி பேசினார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, 1,374 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கல்விக்கொள்கை

புதிய கல்விக்கொள்கை ஆராய்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கிறது. தொன்மையான பொருட்களை ஆய்வு செய்வது மட்டும் இதன் நோக்கமாக இல்லாமல், அப்போதையை அறிவார்ந்த சமூகத்தை வெளிக்கொண்டு வருவதும் நமது கடமை. இதைத்தான் தேசிய கல்விக்கொள்கை கூறுகிறது.

பாரம்பரிய கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்ததாக புதிய கல்விக்கொள்கை உள்ளது. பல ஆண்டுகளாக வெளிநாட்டு ஆதிக்கத்தில் இருந்தோம். அதனால் நமது பாரம்பரிய கல்வி மீது நமக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. மேற்கத்திய கல்வியை ஏற்றுக்கொண்டு உள்ளோம். அதுதான் சரியானது என நினைக்கிறோம். இது பகுத்தாய்வும் தன்மையை கொண்டது.

பகுத்தாய்வு தன்மை

அதே நேரத்தில் நமது பாரம்பரியமான பகுத்தாய்வு தன்மையையும் ஏற்றுக்கொண்டு உள்ளுணர்வு சார்ந்த ஒரு அறிவும் உண்டு. இந்த இரண்டையும் ஒருங்கிணைத்து பார்க்கும் அணுகுமுறையை தேசிய புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்துள்ளது.

உதாரணமாக நாம் தற்போது புதிய மருத்துவத்தை பயன்படுத்துகிறோம். நம்மிடம் பழங்கால சிகிச்சை முறையும் உள்ளது. இவை இரண்டையும் ஒருங்கிணைப்பது போல் புதிய கல்விக்கொள்கை உள்ளது. புதிய கல்விக்கொள்கை புதிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த வகையில் தமிழக அரசை மிகவும் பாராட்டுகிறேன். கல்வி நிலையங்களுக்கு அதிகளவு ஆய்வு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக நிதி உதவி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com