நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு: வானதி சீனிவாசன் கண்டனம்

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுதான் மாநில அரசின் முதல் கடமை என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு: வானதி சீனிவாசன் கண்டனம்
Published on

நெல்லை

நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன.இதனால், பொருட்சேதம் எதுவும் இல்லை. சம்பவம் பற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

அமரன் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் போரில் மரணம் அடைந்த நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் வீர வரலாறுதான் அமரன் படம்.  மக்களிடம் தேசபக்தியை விதைக்கும் இப்படத்திற்கு சில அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனாலும் வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு மவுனம் காப்பதால் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இனியும் திமுக அரசும் காவல்துறையும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நிலைமை விபரீதமாகிவிடும். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுதான் மாநில அரசின் முதல் கடமை. வாக்கு வங்கி அரசியலுக்காக அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை அனுமதிக்கக் கூடாது. பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யாத காவல்துறை, அதற்கு எதிராக வன்முறை கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுத்த இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது .

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்வதுடன் அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் .  தேசபக்தி திரைப்படத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அடிப்படைவாதிகள் செயல்படுவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. என தெரிவித்துள்ள்ளார் 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com