

சென்னை
நேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு திரும்பியபோது பஸ் விபத்தில் சிக்கி, தமிழர்கள் 7 பேர் பலியான சம்பவம் தொடர்பாக மத்திய இணை மந்திரி எல். முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழ்நாட்டின் பொள்ளாச்சி, தேவகோட்டை பகுதிகளை சேர்ந்த 25 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.
நேபாளத்தின் மனகாமனா கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு திரும்பி கொண்டிருந்தபோது 14 பேர் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்த சிலர் அருகிலுள்ள சித்வான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேபாள விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அதுபோலவே சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் எனவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேபாள விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உதவிகளை செய்திட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதனடிப்படையில் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசினேன். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை நாளை புதுடெல்லிக்கு கொண்டு வந்து அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இந்திய தூதரகம் வாயிலாக தேவையான உதவிகளை செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.