

சென்னை,
புழல் சிறையில் இருந்து நேபாள கைதி ஒருவர் தப்பி ஓடியது எப்படி என்பது தெரியாமல் சிறைக் காவலர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை புழல் சிறையில் 3,300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் காலையில் அறைகளில் இருந்து வெளியே அனுமதிக்கப்படுவது வழக்கம். மாலை 6 மணியளவில் அனைவரும் மீண்டும் அவரவர் அறைகளில் அடைக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் கைதிகளின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது. அப்போது நேபாளத்தை சேர்ந்த ஒரு கைதியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைக் காவலர்கள் மீண்டும் அனைத்து கைதிகளையும் சரிபார்த்தனர். இருப்பினும் நேபாள கைதியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் புழல் சிறையில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இதுபற்றி, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளின் உத்தரவின் பேரில் புழல் சிறை வளாகம் முழுவதும் நேபாள கைதியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த கைதியை கண்டுபிடிக்க முடியவில்லை.
மாயமான கைதி நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், குற்றவழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இருப்பினும் அவர் எப்படி சிறையில் இருந்து வெளியேறினார் என்பது மர்மமாகவே உள்ளது. இதனால் சிறைத்துறை ஊழியர்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர். பாதுகாப்பு நிறைந்த சிறை வளாகத்தில் இருந்து கைதி ஒருவர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.