

சென்னை,
ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'Sailing Women's Dinghy' பிரிவில், இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையர் நேத்ரா குமணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை பெறும் நேத்ரா குமணனுக்கு, தனது சாதனைகளின் மூலம் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்த்திட எனது பாராட்டுகள்.
உலக அரங்கில் இந்திய நாட்டிற்குப் புகழ் சேர்க்கும் விதமாகவும், இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் விதமாகவும் நமது வீரர் - வீராங்கனையர்கள் ஈட்டிவரும் வெற்றி அமைந்துள்ளது. விளையாட்டின் மீது தமிழக இளைஞர்கள் கொண்ட ஆர்வத்திற்குத் தமிழ்நாடு அரசு துணை நிற்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.