தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கூடாது: வைகோ வலியுறுத்தல்

தமிழகத்தில் சுற்றுச்சூழலை கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கூடாது: வைகோ வலியுறுத்தல்
Published on

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், லட்சக்கணக்கான டன் கருங்கல் பாறையை வெட்டி எடுத்து குகை குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்த திட்டத்தை எதிர்த்து, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். வழக்கு முடிவில் அரசு தரப்பில் தடையின்மை சான்று வாங்கவில்லை என பதில் மனுதாக்கல் செய்து இருந்தனர். ஆகவே, கோர்ட்டு தடை ஆணை வழங்கி உள்ளது. எனவே, காட்டு உயிர்களுக்கு கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கிற விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு ஏற்க கூடாது; ஏற்கனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்ப பெற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் சுற்றுச்சூழல் சான்றுக்கு தடை விதிக்கும் தீர்ப்பை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், மத்திய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது. எனவே, இந்த திட்டத்திற்காக தமிழக அரசு வழங்கிய நிலத்தையும் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com