சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிதாக 27 காவலர்கள் நியமனம்

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை அடுத்து அதிரடி நடவடிக்கையாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிதாக 27 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிதாக 27 காவலர்கள் நியமனம்
Published on

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் நியமிக்கப்பட்டார். பின்னர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்து, 27 காவலர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர், புதிய தலைமைக் காவலர்கள் உள்பட 27 பேரை நியமித்து காவல்துறை எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com