

சென்னை,
அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான புதிய தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை குறித்த மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது:-
தொழிலாளர்களுக்கு பணியின்போது விபத்துகளின் காரணமாக ஏற்படும் பாதிப்பு மற்றும் மரணத்திற்கு இழப்பீடு வழங்குதல் ஆகிய நிதி சார்ந்த உதவிகளை தொழிலாளர் நலத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 5,415 பதிவு பெற்ற தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கண்காணிப்பு நடவடிக்கைகளை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகம் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பட்டாசு ஆலைகள், வேதிப் பொருட்களை கையாளும் தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
படித்து முடித்த இளைஞர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பை விரைவாகவும், எளிதாகவும் பெற அரசு பல்வேறு முன்னோடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தனியார் துறையிலும் தொழில் முனைவராக முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். இதுவரை 139 சிறிய மற்றும் 16 பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 513 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 26,330 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
வெற்றித்தமிழகம் தொலைநோக்கு பார்வையின்படி ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் மிகுந்த முக்கியத்துவம் கருதி, அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் அது தொடர்பான புதிய தொழில் பயிற்சி தொடங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. அனைத்து தொழில் பிரிவுகளிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் திட்டங்கள் (ஏ.ஆர் மற்றும் பி.ஆர்) அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.