

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை விரைந்து செயல்படுத்திடும் பொருட்டு 65 கோடி ரூபாய் அனுமதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.நரம்பியல் துறைக்கென்று புதிதாக உருவாக்கப்படும் இந்தக் கட்டடம் ஏறத்தாழ 1 லட்சத்து 12 ஆயிரத்து சதுர அடியில் நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.கட்டிடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், 4 மின்தூக்கிகள், 2 படிக்கட்டுகள், சாய்வுதளம், மருத்துவ திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.