

சென்னை,
பெருங்குடி மண்டலத்தில் ரூ.1.84 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டிடம், இ-சேவை மையம் மற்றும் நவீன எரிவாயு தகனமேடையை மேயர் பிரியா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று மேயர் பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், பெருங்குடி மண்டலம், வார்டு-184க்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகம் சாலையில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.35.58 லட்சம் மதிப்பீட்டில் 95.10 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடத்தினையும், மூலதன நிதியில் ரூ.5.81 லட்சம் மதிப்பீட்டில் 19.34 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட இ-சேவை மையத்தினையும் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, வார்டு-191க்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை, கிராம மயான சாலை, சாய் கணேஷ் நகரில் மூலதன நிதியில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் 301 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட புதிய நவீன எரிவாயு தகனமேடையினை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். பின்னர், இவ்வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பி. சரவணன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) விஸ்வநாதன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெ.எல். லட்சுமி, பி. சிவப்பிரகாசம், மண்டல அலுவலர் ஹார்டின் ரோஸாரியோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.