புதிய குற்ற விசாரணை முறை சட்டம்: தனிமனித சுதந்திரத்துக்கு ஆபத்து - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மத்தியில் அமையவுள்ள புதிய அரசு, முதல் பணியாக இதில் இடம்பெற்றுள்ள கடுமையான விதிகளை அகற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் அபாயகரமானது. ஏழை, உழைக்கும் வர்க்கம் மற்றும் நலிந்த பிரிவினரை இச்சட்டம் ஒடுக்கும் கருவியாக மாறும். பெரும்பாலான கைதிகள் (விசாரணையின் கீழ் உள்ளவர்கள் உள்பட) ஏழைகள், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய குற்ற விசாரணை முறை சட்டத்தில் அரசியலமைப்பிற்கு முரணான, அரசியலமைப்பின் 19 மற்றும் 21-வது பிரிவுகளை மீறும் பல விதிகள் உள்ளன. மேற்கண்ட சட்டங்களின் பாதிப்பை ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் சுமக்க நேரிடும்.

புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 'சட்டத்தின் சரியான செயல்முறையை' வலுப்படுத்துவதற்குப் பதிலாக, 'சுதந்திரம்' மற்றும் 'தனிப்பட்ட சுதந்திரம்' ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் உள்ளன.

கைது மற்றும் போலீஸ் காவலில் (60 நாட்கள் அல்லது 90 நாட்கள் வரை காவலை நீட்டிக்க முடியும்) இச்சட்டம் காவல்துறையின் அத்துமீறலுக்கும், விசாரணையின்போது துன்ப சம்பவங்களுக்கும் வழிவகுத்துவிடும்.

2024-ம் ஆண்டில் மத்தியில் அமையவுள்ள புதிய அரசு, முதல் பணியாக இந்த சட்டங்களை மறு பரிசீலனை செய்து, அதில் இடம்பெற்றுள்ள கடுமையான விதிகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com