'மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என புதிய சைபர் மோசடி: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சென்னை திருவான்மியூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் செல்போனுக்கு மின்சார வாரியம் அனுப்பியதாக குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
'மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என புதிய சைபர் மோசடி.
Published on

சென்னை,

'மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என மின்சார வாரியம் பெயரில் நடைபெற்றுவரும் புதிய சைபர் மோசடி மீது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மின்சார கட்டணம்

சைபர் குற்றவாளிகள் வெவ்வேறு வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிப்பு மற்றும் தகவல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில், சென்னை திருவான்மியூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. மின்சார வாரியம் அனுப்பியதாக குறிப்பிடப்பட்ட அந்த செய்தியில், “உங்களுடைய கடைசி மாத மின்சார கட்டணம் 'அப்டேட்' ஆகவில்லை. அதனால் இன்று இரவு 9.45 மணிக்கு பின்னர் உங்களுடைய மின்சார இணைப்பு துண்டிக்கப்படும். 8981202584 என்ற மின்சார வாரிய எண்ணை உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

உதவி பொறியாளரின் உதவி

மின்சார கட்டணத்தை இறுதி தேதிக்கு முன்னதாகவே தவறாமல் கட்டி வரும் அந்த தனியார் நிறுவன ஊழியருக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்தது. உடனே குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்த செல்போன் எண்ணுக்கு தான் ஏற்கனவே மின்சார கட்டணத்தை கட்டிவிட்டதாக தகவல் அனுப்பினார். மேலும் முந்தைய மாதங்களில் செலுத்திய தனது 2 மின்சார கட்டண விவரங்களையும் அனுப்பினார். அந்த எண்ணை தொடர்புகொண்டபோது மின்சார கட்டணத்தை 'அப்டேட்' செய்ய தான் உதவுவதாக எதிர்முனையில் பேசியவர் தெரிவித்தார்.

மேலும் வாட்ஸ்அப் தொடர்பில் வருமாறு கூறினார். அதில், அந்த நபரின் செல்போன் எண் ஆங்கிலத்தில் 'billupdate EB' என்று சேமிக்கப்பட்டிருந்தது. இதனை மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ எண் என்று நினைத்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே, கொட்டிவாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் எம்.பாலசுந்தரியை, தனியார் நிறுவன ஊழியர் தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். அப்போது. அவர் "இதுபோன்று மின்சார வாரியம் நுகர்வோருக்கு தகவல் எதுவும் அனுப்பவில்லை. சைபர் மோசடி பேர்வழிகளாக இருப்பார்கள் எனவே உடனடியாக இணைப்பை துண்டித்துவிடுங்கள்” என்று சரியான சமயத்தில் எச்சரிக்கை கொடுத்தார். இதையடுத்து செல்போன் இணைப்பை துண்டித்ததால், பணம் மட்டுமின்றி தகவல் திருடு போவதும் தவிர்க்கப்பட்டது.

குற்றச்சாட்டு

இந்த சூழலில் தனியார் நிறுவன ஊழியர் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி புகார் தெரிவிக்க 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொண்டார். அதனை எடுத்து பேசியவர். மின்சார கட்டணத்தை அப்டேட் செய்வதில் ஏமாந்ததாக நிறையபேர் புகார் தெரிவிக்கிறார்கள். மின்சார வாரிய தகவல்களை சைபர் குற்றவாளிகள் திருடி இதுபோன்று மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே சைபர்கிரைம் இணையதளத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட பின்னரும், அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com