தமிழகத்தை நோக்கி வரும் புதிய புயல்... இன்று முதல் 19-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி வரும் புதிய புயல்... இன்று முதல் 19-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு
Published on: 

பருவமழை

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. கடந்த மாதம் (அக் டோபர்) 1-ந் தேதி முதல் நேற்று வரை யிலான நிலவரபடி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவான 24.3 செ.மீ.ஐ விட 4 சதவீதம் அதிகமாக அதாவது 25.4 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்தும் மழைக்கான சூழல் இருக்கிறது.

அந்தவகையில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து நாளை (புதன்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னி யாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக 12-ந் தேதி (நாளை மறுதினம்) தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது படிபடியாக வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வருகிற 15-ந்தேதி இலங்கையையொட்டிய வங்கக்கடல் பகுதிக்கு வந்து நிற்க வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் மேலும் வலுபெற்று தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு புயலாகவும் மாற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி மழையை சுமந்தபடி பயணித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 15-ந்தேதியில் இருந்து மழைக்கான சூழல் தொடங்குகிறது. 20-ந்தேதி வரை தமிழ்நாட்டில் நல்ல மழை இருக்கும். புயலாக மாறும் பட்சத்தில் அது தமிழக பகுதிகளில் 19-ந் தேதியோ, அதற்கடுத்த நாட்களிலோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

X