அரியலூர் ரெயில் நிலையத்தில் புதிய டிஜிட்டல் கால அட்டவணை

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அரியலூர் ரெயில் நிலையத்தில் புதிய டிஜிட்டல் கால அட்டவணை வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அரியலூர் மட்டுமின்றி பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தமாகவும், படிப்பு சம்பந்தமாகவும் அரியலூர் வருவதற்கு பெரும்பாலானவர்கள் ரெயிலையே பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ரெயில் வரும் நேரம், வண்டி எண் மற்றும் புறப்படும் நடைமேடை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் ரெயில்வே கால அட்டவணை வைக்கப்படாமல் இருந்தது. இதனால் இந்த ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதியடைந்தனர். இது தொடர்பாக பயணிகளின் கோரிக்கை குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி 'டிஜிட்டல்' கால அட்டவணை அமைப்பதற்காக உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அரியலூர் ரெயில் நிலையத்தில் ரெயில் வரும் நேரம், வண்டி எண், புறப்படும் நடைமேடை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் வகையில் 2 'டிஜிட்டல்' கால அட்டவணைகள் வைக்கப்பட்டுள்ளன.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டாலும் கால அட்டவணை மட்டும் அமைக்கப்படாமல் இருந்தது. தற்போது இந்த 'டிஜிட்டல்' கால அட்டவணை வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.