யானைகள் வருவதை தடுக்க புதிய அகழி தோண்டும் பணி தொடக்கம்; பொதுமக்கள் வரவேற்பு

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் புதிய அகழி தோண்டுவது வரவேற்கத்தக்கது.
யானைகள் வருவதை தடுக்க புதிய அகழி தோண்டும் பணிதொடக்கம்; பொதுமக்கள் நிம்மதி
புதிய அகழி தோண்டும் பணிதொடக்கம்
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை காலால் மிதித்தும், தின்றும் நாசம் செய்து வருகின்றன.

காட்டு யானை

மேலும், வழியில் எதிரே வரும் பொதுமக்களையும் ஓட ஓட விரட்டுவதால், அந்த பகுதி மக்கள் கடும் பீதியிலும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் வசித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்கி யானைகள் வருகை

பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். முதுமலை தப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து 'சுஜய்', 'வசீம்' உள்ளிட்ட 2 கும்கி யானைகள் பாடந்தொரை பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகளின் உதவியுடன், காடுகளிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கொட்டாய் மட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை நேற்றும் வனத்துறையினர் கும்கி யானைகள் மூலம் விரட்டியடித்தனர்.

புதிதாக அகழி தோண்டும் பணி

இதற்கிடையே, காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராதபடி அவை வரும் வழித்தடங்களை கண்டறிந்து புதிய அகழிகளை தோண்ட வேண்டும் எனவும், ஏற்கனவே உள்ள அகழிகளை தூர்வார வேண்டும் எனவும் வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, தற்போது 4-ம் மைல், கோல்கேட், செளுக்காடி ஆகிய முக்கிய இடங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் புதியதாக ஆழமான அகழிகள் தோண்டும் பணியை வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளனர்.

பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே தோண்டப்பட்டு, மண் மூடி போயிருந்த பழைய அகழிகளை தூர்வாரும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது முற்றிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, "காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் புதிய அகழி தோண்டுவது வரவேற்கத்தக்கது. ஆனால், இதே பகுதியில் உள்ள சில தனியார் எஸ்டேட்களில் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இந்த புதர்களை அகற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

முகாமிட அதிக வாய்ப்பு

எஸ்டேட் நிர்வாகத்தினர் பெயரளவுக்கு மட்டுமே புதர்களை அகற்றும் பணியை தொடங்கிவிட்டு, பின்னர் அப்படியே கைவிட்டுவிட்டனர். இதனால் மண்டியுள்ள புதர்களுக்குள் காட்டு யானைகள் மறைந்து முகாமிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com