

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்த புதிய தேர்வு விதிகளை மாற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்வி மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர். பருவத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் வரையறுக்கப்பட்ட காலத்தை விட குறைந்தது ஓராண்டுக்கு பிறகே படிப்பை முடிக்க வழி வகுக்கும் புதிய விதிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017-2018-ம் கல்வியாண்டுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ஒரு மாணவர் எத்தனைப் பாடங்களில் தோல்வியடைந்திருந்தாலும், அவர் அவற்றை எந்தப் பருவத்தில் வேண்டுமானாலும் எழுத முடியும். அதனால், பொறியியல் படிப்பின் முதல் 3 ஆண்டுகளில் பல பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் கூட, அனைத்துப் பாடங்களுக்கான தேர்வுகளையும் கடைசி ஆண்டின் இரு பருவங்களில் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்போதும் அனைத்து தமிழக பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய முறை தான் தொடர்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் புதிய தேர்வு விதிகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றதாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு விதி நடைமுறை சாத்தியமற்றதாகும். எனவே, புதிய தேர்வு விதிகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேர்வு விதிகளையே பல்கலைக்கழகம் மீண்டும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.