சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம் - நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு உத்தரவு

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம் - நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு உத்தரவு
Published on

சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இங்கு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதால் போக்குவரத்து வசதிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதிக சிக்கல்கள் உள்ள சாலை சந்திப்புகளில் எளிதான போக்குவரத்தை உருவாக்குவதற்காக நிலையான போக்குவரத்து மேலாண்மை திட்டம் அவசியமாகிறது.

தமிழக சட்டசபையில் 2022-23ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது, வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ரூ.98 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவித்தார்.

இந்த நிலையில் அரசுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கடிதம் எழுதினார். அதில், இந்த திட்டத்துக்காக கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்பாட்டுக் குழுவிடம் ரூ.176 கோடி கோரி கருத்துரு அனுப்பியதாகவும், அந்த தொகைக்கு மேம்பாட்டுக் குழு அனுமதியளித்ததாகவும் நகர ஊரமைப்பு இயக்குனர் தெரிவித்தார். பின்னர் நில அளவை தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றன.

அதன் அடிப்படையில் நில நிர்வாக ஆணையர் திருத்திய மதிப்பீடுகளை அரசுக்கு அனுப்பினார். எனவே நில மதிப்புக்காக ரூ.113 கோடி மற்றும் கட்டுமானத்துக்கான மதிப்பீடு தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டது.

நிலத்துக்கான திருத்தப்பட்ட மதிப்பு ரூ.113 கோடி என்பதால், அதன் மொத்த மதிப்பீடாக ரூ.195.19 கோடியில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான கருத்துருவை அரசுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் அனுப்பி அனுமதி கோரினார்.

இதில் ரூ.176 கோடியை கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் இருந்து பெறலாம். விருகம்பாக்கம்- அரும்பாக்கம் கால்வாய் பகுதியில் கட்டப்பட இருந்த மேம்பால கட்டுமானம் ரத்து செய்யப்பட்டதால் நிலுவையில் உள்ள ரூ.4.18 கோடி நிதி மற்றும் நடேசன் நகர் மேம்பால திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்படாமல் உள்ள மூலதன மானிய நிதி ரூ.14.38 கோடி ஆகியவற்றை சேர்த்து இதில் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், நிலம் எடுப்பு முடிந்த பின்பு பால வடிவமைப்புக்கான ஒப்பந்தம் கோரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதை கவனமாக பரிசீலித்து, ரூ.195.19 கோடியில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் மேம்பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com