

சென்னை,
தமிழகத்தில், கடந்த 8 மாதங்களாக, வீடுகளுக்கு புதிய சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவதை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் மீது, மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையில், சமையல் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, கச்சா எண்ணெய், சமையல் கேஸ் ஏற்றி வந்த கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதிய கேஸ் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது.
கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதும், ஜூலையில் இருந்து கேஸ் வினியோக கட்டுப்பாடுகளை, மத்திய அரசு விலக்கிக் கொண்டது. அதேசமயம், 8 மாதங்களாகியும், இன்னும் புதிய கேஸ் இணைப்பு வழங்கும் பணி தொடங்கவில்லை.
இதனால், புதிய இணைப்பு கேட்டு ஏஜென்சிகளுக்கு செல்லும் பலரும், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். புதிய கேஸ் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.