புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் அண்ணா துரை, தொழிலதிபர். இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமார் (27) ஆகியோருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தனது சாவுக்கு தனது கணவர், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய ஆடியோ அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வர மூர்த்தியை கைது செய்தனர்.

இதையடுத்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட் டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிதன்யாவின் தந்தை அண்ணாத்துரை மற்றும் அவருடைய தரப்பு வக்கீல் மோகன்குமார் ஆகியோர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் நேற்று இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அதில் கவின்குமார், ஈஸ்வர மூர்த்தி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவித்து இருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குணசேகரன் இந்த மனுக்களின் விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி, இந்த மனு நீதிபதி குணசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி தரப்பில் இடையீட்டு மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கேட்டதால், விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com