

தஞ்சையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை வழங்க வேண்டும். புதிய அரசு நிலைபெறுவதற்கு ஒரு கால அவகாசம் தேவைப்படும். அரசின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்த நேரம் பிடிக்கும். ஆனால், முக்கியமான சில துறைகளுக்கான அமைச்சக பொறுப்புகள் இன்னும் ஒதுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரியது. அதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நாங்கள் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளிப்போம். உழைக்கும் மக்களின் கோரிக்கைகளையும், தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளையும் தொடர்ந்து முன்வைப்போம். தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு எங்கள் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். அதேசமயம், சாதாரண மக்களின் குரலாகவும் செயல்படுவோம்.வருகிற ஜூன் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும். மேலும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக ஒன்றிய அரசு தேவையான மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள நிதிகளையும் தாமதமின்றி வழங்க வேண்டும்.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு தடையின்றி வழங்க வேண்டும். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுதியான நிலைப்பாட்டில் இருக்கும். தவறு நடந்தால் போராட்டக் குரல் எழுப்ப தயங்கமாட்டோம். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். தற்போதைய நெருக்கடியான சூழலில் தமிழக அரசுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்பட வேண்டும்.பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.