பிறப்பு, இறப்பை பதிவு செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் -அரசாணை வெளியீடு

ஓராண்டுக்கு மேல் தாமதமாகும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுக்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
பிறப்பு, இறப்பை பதிவு செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் -அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

பிறப்பு மற்றும் இறப்புக்கான பதிவை தாமதமாக செய்தால், அதற்காக கோர்ட்டின் மூலம் உத்தரவு பெற வேண்டியதிருந்தது. இந்நிலையில் வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில், 2017-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிக்கு பின்பு கோர்ட்டு மூலம் பெறப்படும் ஆணைகள் செல்லாது என்று ஐகோர்ட்டு கூறியிருந்தது.

அதன்படி அந்த தேதிக்கு பின்பு வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) மூலமாக பிறப்பு மற்றும் இறப்புக்கான பதிவை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, பிறப்பு, இறப்பு பதிவில் தாமதம் ஏற்பட்டிருந்தால், அதை குறிப்பிட்டு பிறப்பு, இறப்பு நடந்த பகுதிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

2017-ம் ஆண்டுக்கு முன்பு பெற்ற கோர்ட்டு உத்தரவுடன் பதிவுக்காக விண்ணப்பதாரர் வந்தால், பதிவுக்கான உத்தரவை எந்தவித விசாரணையும் இல்லாமல் வருவாய் கோட்டாட்சியர் பிறப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பத்துடன், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இல்லாததற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் பெற்று இணைக்க வேண்டும். கிராம ஊராட்சியில் தாசில்தார் அல்லது கிராம நிர்வாக அலுவலர் (வி.எ.ஓ), பேரூராட்சியில் செயல் அலுவலர், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ஆணையர், கன்டோன்மென்ட் பகுதியாக இருந்தால் செயல் அலுவலரிடம் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

இணைக்க வேண்டியவை

வயது குறிப்பிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பள்ளி ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட பள்ளி ஆவண பதிவுகள் ஆகிய துணை ஆவணங்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கலாம். இந்த ஆவணங்கள் இல்லாவிட்டால், பிறந்த ஆஸ்பத்திரியின் ஆவணங்களையோ அல்லது வீட்டில் பிறந்திருந்தால், அந்த வீட்டின் குடும்ப தலைவருக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் உறவினர்களில் ஒருவர்களிடம் இருந்து எழுத்து வடிவ கடிதத்தையோ பெற்று இணைக்க வேண்டும்.

இறப்பு பதிவுக்காக, இறந்தவர் மற்றும் அவரது துணையின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றுடன் மயானத்தில் பெறப்பட்ட அறிக்கை; ஆஸ்பத்திரியில் இறந்திருந்தால் அங்கு பெறப்பட்ட அறிக்கை, கொலை, தற்கொலை போன்ற அகால மரணம் நேரிட்டு இருந்தால் எப்.ஐ.ஆர். மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை; வீட்டில் இறந்திருந்தால், அருகில் வசிக்கும் உறவினரின் கடிதம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

உண்மைத்தன்மை ஆய்வு

கோட்டாட்சியர் இந்த விவரங்களை ஆய்வு செய்து, கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி 2 வாரங்களுக்குள் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை அளித்த பிறகு, இந்த விவரங்களை உள்ளூர் செய்தித்தாளில் வெளியிடச் செய்து, ஆட்சேபனைகளை அறியலாம்.

கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவல்களை பெற்று, திருப்தியிருந்தால் 60 நாட்களுக்குள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதற்காக தாமத கட்டணமாக ரூ.500 வசூலிக்க பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். சான்றிதழ்களில் தவறு இருந்தால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com