சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் - அமைச்சர் ராஜ்குமார் தகவல்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கிருஷ்ணன் முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் ராஜ்குமார் தகவல்
Published on: 

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திப்பதாவது;-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (08.10.2026) வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டுவது குறித்து குடியிருப்புதாரர்களிடம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆகியோர் தலைமையிலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கிருஷ்ணன் முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தெரிவிக்கையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சீனிவாசபுரம் திட்டப்பகுதி 1970 ஆம் ஆண்டு 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 68 தொகுப்புகளில் 1,356 குடியிருப்புகள் தரை மற்றும் 1,3,4 தளங்களுடன் ஒவ்வொரு குடியிருப்பும் தோராயமாக 230 சதுர அடி முதல் 320 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டதாகும். 2024 டிசம்பர் மாதம் குடியிருப்புதாரர்களிடம் கணக்கெடுப்பு நடத்தியதன் அடிப்படையில், 1,356 குடியிருப்புகளில் 372 மீனவ குடும்பங்களும், 984 மீனவர் அல்லாத குடும்பங்களும் வசித்து வருகின்றனர். மேலும், 450 குடும்பங்கள் குடியிருப்பு பகுதிகளிலும், 860 குடும்பங்கள் ஆற்றங்கரையோர பகுதிகளிலும், 610 குடும்பங்கள் கடற்கரையோர பகுதிகளிலும் என மொத்தம் 1,920 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருகின்றனர்.

புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்

கடந்த 2018 ஆம் ஆண்டு சீனிவாசபுரம் திட்டப்பகுதியை தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு செய்து மறுகட்டுமானத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இக்குடியிருப்புகள் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேலானதாலும், நீண்ட கால பயன்பாடு மற்றும் கடலோர சூழல் தாக்கத்தினாலும் இக்குடியிருப்பு சிதிலமடைந்து கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. சிதிலமடைந்த குடிருப்புகளிலிருந்து வெளியேருமாறு கடந்த 2019 ஆண்டு முதல் வாரியத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் குடியிருப்புதாரர்கள் இதுநாள் வரை வெளியேறாத காரணத்தினால் மறுகட்டுமானம் செய்ய முடியவில்லை. அவ்வப்போது படிக்கட்டுகள், கூரைகள், சூரிய மறைப்புகள் சிதிலமடைந்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இந்த அரசை பொறுத்தவரை மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் தான் முக்கியம். வருகின்ற காலம் மழைக் காலம் என்பதால் குடியிருப்புவாசிகள் ஒற்றுமையாக இருந்து இந்த அரசிற்கு முழு ஒத்துழைப்பை வழங்கி சிதிலமடைந்த குடியிருப்புகளிலிருந்து உடனடியாக காலி செய்து தர வேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்களின் உத்தரவை பெற்று மூன்று பாகமாக பிரித்து அத்தனை குடியிருப்புவாசிகளுக்கும் புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும். இதற்கு குடியிருப்புவாசிகளும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்ததோடு மட்டுமல்லாமல் அதனை விரைவில் செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ரா.கிர்லோஷ்குமார் வாரிய மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி வாரியச் செயலாளர் க.இராமமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் கா.சரவணன், வாரிய பொறியாளர்கள் மற்றும் சீனிவாசபுரம் திட்டப்பகுதி குடியிருப்புதாரர்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com