

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ் இன்று (08.07.2026) ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கான “நலம்AI” எனும் உரையாடலுடன் கூடிய வாட்ஸ்ஆப் செயலியை (Whatsapp Chatbot) பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதியில் ரூபாய் 63.48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவினை (E-ICU) தொடங்கி வைத்தார். மேலும், தனியார் தொழில் நிறுவனங்களான பாக்ஸ்கான், ஹூண்டாய் மற்றும் ரெடிங்டன் ஆகிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து (CSR) ரூபாய் 15.05 கோடி மதிப்பீட்டிலான நவீன மருத்துவ உபகரணங்களின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயனாளிகள் கழிப்பறைகளின் பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிப்பதற்கான “My Hospital” எனும் QR Code செயலியையும் தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள், சுகாதார தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறுவதற்காகவும், டிஜிட்டல் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் “நலம்AI” எனும் உரையாடலுடன் கூடிய வாட்ஸ்ஆப் செயலி (Whatsapp Chatbot) இன்று தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணை தங்களது Whatsapp தொடர்பு பட்டியலில் பதிவு செய்து Hi என்று செய்தி அனுப்புவதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இச்சேவையை அணுகி பயன்பெறலாம்.
இந்த உரையாடல் சேவை மூலம் பொதுமக்கள் தாங்களே பதிவு செய்து கொள்ளுதல், மருத்துவரின் பரிந்துரை சீட்டுகளை பார்வையிடுதல், ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகளை தெரிந்து கொள்ளுதல் மற்றும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எளிதாக பெறலாம்.
இச்சேவைகள் முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு பின்னர் மீதமுள்ள 16 மாவட்டங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத் துறையில் “நலம்AI” மூலமாக வெளிநோயாளர் முன்பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை ஒதுக்கியுள்ள நேர ஒதுக்கீடுகளின் அடிப்படையில் பொதுமக்கள் “நலம்AI” மூலம் தங்களது வருகையை முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளலாம். இந்த முயற்சி மருத்துவப் பயனாளிகளின் காத்திருப்பு நேரத்தை குறைத்து மருத்துவ சேவைகளை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் பெற வழிவகுக்கும். இத்திட்டம் படிப்படியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனைத்து துறைகளுக்கும், அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்தளத்தில் அமைந்துள்ள வார்டு-111-ஆனது தமிழ்நாடு மருத்துவ சேவைகள் திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட நிதியில் ரூபாய் 63.48 லட்சம் மதிப்பில் மூன்றாம் நிலை அதிதீவிர மருத்துவ மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைப் பிரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் 20 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் மருத்துவப் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முறையாக உள்ளதா என்பதை பொதுமக்கள் தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க ஏதுவாக My Hospital எனும் செயலி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறை பகுதிகளில் இந்த செயலியின் QR Code காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்து புகார்களையோ அல்லது தங்களுடைய கருத்துகளையோ தெரிவிக்கலாம். பராமரிப்பில் ஏதேனும் குறைபாடுகள் குறித்து பயனாளர் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு செயலியின் மூலமாக தகவல் தெரியவரும். இதனடிப்படையில் தொடர்புடைய இடத்தில் பராமரிப்புப் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும்.
தொழில் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் (CSR) கீழ் வழங்கப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள்
பாக்ஸ்கான் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்ட நிதியில் ரூபாய் 5,52,90,838/- மதிப்பில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ இரைப்பை மற்றும் குடல் நோய் துறையில் அறுவை சிகிச்சை அரங்கிற்கான ERCP மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன மருத்துவ உபகரணத்தின் மூலம் கல்லீரல், பித்தப்பை, கணையம் ஆகிய உறுப்புகளின் குழாய்களில் கேமரா மூலம் கண்காணித்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
மேலும், பாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் ரூ.6,09,00,000/- மதிப்பில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள மயக்கவியல் துறைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏதுவாக 20 அதிநவீன மயக்க மருந்து செலுத்தும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 3,16,86,315/- மதிப்பில் பொது அறுவை சிகிச்சை பிரிவானது மூன்றாம் நிலை தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
ரெடிங்டன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 24,74,895/- மதிப்பில் கோலெடோகோஸ்கோப் (Choledochoscope) உபகரணம் பொது பித்த நீர் குழாய் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர். சுகந்தி ராஜகுமாரி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாராம், நிலைய மருத்துவ அலுவலர் அறவாழி உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.