ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்; முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

12 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சர்  விஜய் திறந்து வைத்தார்
Published on

சென்னை,

ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 113 கோடி ரூபாய் செலவில் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை. பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆத்தூர், மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதிரியக்க சிகிச்சை மையம், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் திறந்து வைக்கப்பட்ட மருத்துவ கட்டடங்களின் விவரங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை தற்போது 174 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு 46 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கூடுதல் கட்டடமும், 2.81 கோடி ரூபாய் செலவில் அதிநவீன உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டு, அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் வெளி மருத்துவப் பயனாளர்கள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், முதல் தளத்தில் அறுவை அரங்கு, இரத்த சுத்திகரிப்புப் பிரிவு, காது, மூக்கு, தொண்டைப் பிரிவு, இரண்டாம் தளத்தில் குழந்தைகள் நலப்பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, ONE STOP CENTRE, மூன்றாம் தளத்தில்பெண்கள் மற்றும் ஆண்கள் உள்பயனாளர்கள் பிரிவு, இரத்த வங்கி, நான்காம் தளத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிகிச்சைப் பிரிவு, விஷமுறிவு சிகிச்சைப் பிரிவு, ஐந்தாம் தளத்தில் உள்மருத்துவப் பயனாளர்கள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, மருந்துப் பொருட்கள் அறை, நிர்வாக அலுவலகம், ஆறாம் தளத்தில் அறுவை அரங்கு, அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்புப் பகுதி ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையானது. தற்போது 140 படுக்கை வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, திறன்மிகு தீக்காய சிகிச்சைப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனையைத் தரம் உயர்த்திடும் வகையில் 28.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு (Maternal Child Health Wing) இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரே கட்டடமாகத் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், 3.85 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இக்கட்டடத்தில் புறக்காவல்நிலையம், மைய ஆக்சிஜன் அமைப்பு, சிசிடிவி கேமராக்கள், LAN இணைப்புகள், தீத்தடுப்பு உபகரணங்கள், மின்தூக்கி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கூடுதலாக 50 படுக்கைகளும், மகப்பேறு பிரிவிற்கு கூடுதலாக 100 படுக்கைகளும் அதிகரித்து, ஏற்கனவே உள்ள 140 படுக்கைகளுடன் கூடுதலாக இந்த 150 படுக்கை வசதிகளையும் சேர்த்து மொத்தம் 290 படுக்கை வசதிகள் கொண்டதாக சிவகாசி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை தற்போது 38 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 1.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தில், விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு. செவிலியர் அறை, காவலர் விசாரணை அறை, புறமருத்துவப் பயனாளர்கள் பதிவு செய்யும் இடம், காத்திருப்பு அறை, மருந்தகம், நுண்கதிர் பதிவு, பல்மருத்துவ ஆலோசனை, பெண்கள் மருத்துவ ஆலோசனை, ஆண்கள் மருத்துவ ஆலோசனை, ஆய்வகம், கருப்பைவாய் மற்றும் மார்பகப் பரிசோதனை மையம், மக்களைத்தேடி மருத்துவம், முதன்மை மருத்துவ அலுவலர் அறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்மருத்துவப் பயனாளர்கள் பிரிவு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை தற்போது 36 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 1.05 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தில், காத்திருப்பு அறை, மருத்துவக் கிடங்கு, நுண்கதிர் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, ஆய்வகம், முதன்மை மருத்துவ அலுவலர் அறை. உள் மருத்துவப் பயனாளர்கள் அறை, கழிவறைகள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனை

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர், அரசு மருத்துவமனை தற்போது 60 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் நுண்கதிர் அறை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பிரிவு, ஆய்வகம். மருத்துவப் பயனாளிகள் கழிப்பறை, மருந்துக்கிடங்கு. முதல் தளத்தில் அறுவை அரங்கம், மருத்துவர் அறை. அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்பு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அரசு மருத்துவமனை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அரசு மருத்துவமனை தற்போது 60 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, நுண்கதிர் பிரிவு, கட்டுகட்டும் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் மற்றும் காத்திருப்பு அறை, முதல் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப்பின் கவனிப்புப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு மருத்துவமனை

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு மருத்துவமனை தற்போது 28 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் வெளிமருத்துவப் பயனாளிகள் பிரிவு, ஆய்வுக்கூடம், தொற்றாநோய்ப் பிரிவு, குடும்பநலப் பிரிவு, முதல் தளத்தில் அறுவை அரங்கம், அறுவை சிகிச்சைப்பின் கவனிப்புப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம் புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சை வழங்கும் நோக்கில், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் செலவில் 20 உள்நோயாளிகள் படுக்கை வசதிகளுடன் கூடிய கதிர்வீச்சு புற்றநோய் பங்கர் கட்டடம் மற்றும் 2.78 கோடி ரூபாய் செலவில் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் என மொத்தம் 6.78 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கதிரியக்க சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள இம்மையமானது புற்றுநோய் கதிரியக்க சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்புதிய வசதி மூலம் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவப் பயனாளர்கள் உயர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம். மதுரை, திருநெல்வேலி, சென்னை போன்ற தொலைதூர மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டிய அவசியமும், காலவிரயமும் குறைவதுடன் உரிய நேரத்தில் தரமான சிகிச்சைபெறும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சார்பில் 11 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் திருப்பத்தூர், கட்டப்பட்டுள்ள 12 கிராமப்புற மற்றும் நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மொத்தம் 113 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு.அனீஷ் சேகர்,மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணைச் செயலாளர் அழகுமீனா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.அ. ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com