

சென்னை,
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்க்கு மாற்றபட உள்ள நிலையில் புதிய அலுவலத்திற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்-அமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அந்த மாளிகையின் 10-வது தளத்தில் புதிய முதல்-அமைச்சர் அறை, தனிச் செயலாளர்களுக்கான அலுவலகங்கள், நவீன ஆலோசனைக் கூட்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தளத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளது.
முதற்கட்டமாக இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள 'கட்டிடக் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டம்-1' கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மொத்தம் 3 பிளாக்குகளாக இந்தப் பணிகள் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதன்படி, பிளாக் 1-ல் ரூ.2.41 கோடிக்கு நிர்வாக அலுவலக வசதிகளை மேம்படுத்தவும், பிளாக் 2-ல் ரூ.2.01 கோடியில் உள் கட்டமைப்பு பணிகளுக்கும், பிளாக் 3-ல் ரூ.1.12 கோடிக்கு இதர பணிகளுக்கும் என மொத்தம் ரூ.5.54 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை கெடு விதித்துள்ளது.
மேலும், டெண்டர் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் அவை இணைய தளத்திலேயே உடனுக்குடன் பதிவேற்றப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தமிழக முதல்-அமைச்சர்களிலேயே பாரம்பரிய அலுவலகக் கட்டடத்திலிருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.