

சென்னை,
நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய இணையவழி கொள்முதல் நடைமுறைகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு நடத்தினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் குழு முறை கலைக்கப்பட்டு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான நுகர்வுப் பொருட்களை வெளிப்படைத்தன்மையுடன், தரமாகவும் நியாயமான விலையிலும் கொள்முதல் செய்வதற்காக புதிய இணையவழி (Online) கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய கொள்முதல் நடைமுறைகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் அவர்கள் இன்று (17.09.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இணையவழி கொள்முதல் முறையின் செயல்முறை, வழங்குநர் பதிவு, விலை நிர்ணயம், தரப் பரிசோதனை மற்றும் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் நடைமுறைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது. இம்முறையை மேலும் பயனுள்ளதாக செயல்படுத்த தேவையான பல்வேறு அறிவுரைகளை அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் (SHGs), விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) ஆகியவற்றுடன், உற்பத்தியாளர்கள் (Manufacturers) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர் (Authorised Dealers) ஆகியோரும் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் விரிவான விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு புதிய இணையவழி கொள்முதல் முறை, வழங்குநர் பதிவு மற்றும் இணையதள பயன்பாடு தொடர்பாக பல கட்ட பயிற்சிகள் வழங்கி, அதிக எண்ணிக்கையிலான வழங்குநர்களை இம்முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இணையவழி கொள்முதல் முறையின் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, தரமான பொருட்களை போட்டித்தன்மையுள்ள மற்றும் நியாயமான விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார். கொள்முதல் செய்யும் நிலையிலும், பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு வந்து சேரும் நிலையிலும் உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், கூட்டுறவுச் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்பும் தொடர்ச்சியான கொள்முதல் ஆணைகளும் கிடைக்கும் வகையில் இம்முறையை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்களின் உற்பத்தி மற்றும் வருமானம் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்கள் நியாயமான விலையில் எளிதாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மற்றும் கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.