

பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் மற்றும் போலீசார் பெரம்பலூரில் வாகன ஓட்டிகளில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் கடுமையான அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமல்படுத்தப்படுவது குறித்தும் தெரிவித்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் கூறுகையில், பெரம்பலூரில் நகர் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. பெரும்பாலானோர் சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டபோதும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டபோதும் அவர்கள் மீண்டும் விதிமுறைகளை மீறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தற்போது போக்குவரத்து வீதியை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் இறப்பதற்கு காரணம் அவர்கள் ஹெல்மெட் அணியாததுதான். ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர்கள் உயிரை காப்பாற்றி விடலாம்.
அபராத தொகைக்கு பயந்து ஹெல்மெட் அணிவதை விட நம்மை நம்பி நமது குடும்பம் இருக்கிறது என்று நினைத்து இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். மது போதையில் வாகனங்களை ஓட்டாதீர்கள். உங்களால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது. ஓட்டினால் அவர்கள் பெற்றோர் மீதும் வழக்கு தொடரப்படும். எனவே வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து விபத்தில்லா பெரம்பலூராக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.