தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளுக்கு புதிய விதிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளுக்கான புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது, தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளை உருவாக்குவது போன்ற பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தான் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இதுதொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது.

என்ஜினீயரிங் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மேலும் அந்த கல்லூரிகளை கண்காணிக்க விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம், கல்வி பணியில் அனுபவம் கொண்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி தொடர்பான உள்ளீடுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளன.

உதாரணமாக, இதற்கு முன்பு தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் இளங்கலை முதலாம் ஆண்டு படிப்பில் 60 சதவீதம் மாணவர் சேர்க்கை என்று இருந்ததை, தற்போது 70 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோல், விரிவுரையாளர்களின் சராசரி பணி அனுபவம் 5 ஆண்டுகளாவது இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஆசிரியர்கள்-மாணவர்கள் விகிதம் 1:20 என்ற அடிப்படையில் இருக்கவேண்டும். தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் நிதி, நிர்வாகக் குழு கூட்டப்படவேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. இதனை பின்பற்றாத கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் இந்த விதிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 90 கல்லூரிகள் இதுவரை தன்னாட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com