

சென்னை,
சென்னையில் எதிரி ரவுடியைப் பழிவாங்கும் நோக்கில், மாநகர பஸ்சில் அவரது செல்போன் எண்ணை எழுதி, கொலை செய்ய விரும்புபவர்கள் அந்த எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு குறிப்பிட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ரவுடிகளுக்கு இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. பழிக்குப் பழியாக கொலை சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. எதிரிகளை சிக்க வைப்பதற்காக அவர்களைப் பற்றி போலீசில் புகார் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், மாநகர பஸ் ஒன்றின் இருக்கைக்குப் பின்புறம், “வியாசர்பாடி ரவுடி விக்கியை கொலை செய்ய வேண்டும் என்றால் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்” என்ற வாசகத்துடன் செல்போன் எண் எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பஸ்சில் எழுதப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அது வடசென்னையைச் சேர்ந்த விக்கி என்பவருடையது என்பது தெரியவந்தது.
இதையடுத்து விக்கியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தனது செல்போன் எண்ணை தானே பஸ்சில் எழுதி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தனக்குப் பிடிக்காத யாரோ ஒருவர் தன்னை சிக்க வைப்பதற்காக இதைச் செய்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாநகர பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், விக்கியின் செல்போன் எண்ணை பஸ்சில் எழுதியது வியாசர்பாடி தாமோதரன் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 10 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கொடுங்கையூரில் இருந்து அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் மின்சார பஸ்சில் அவர் இதுபோன்று எழுதியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் ஜாகீர் உசேனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். மாநகர பஸ்களில் இதுபோன்று தேவையற்ற வாசகங்கள் எழுதப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.