ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் புதிய ‘ரோபாட்டிக்’ அறுவை சிகிச்சை மையம்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ‘ரோபாட்டிக்’ அறுவை சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் புதிய ‘ரோபாட்டிக்’ அறுவை சிகிச்சை மையம்
Published on

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் மிக கடினமான அறுவை சிகிச்சைகளை டாக்டர்கள் எளிதில் மேற்கொள்ளும் விதமாக அதிநவீன தொழில்நுட்பத்தில் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மையத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத் தலைவர் தீபக் ஜேக்கப், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் அனந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ரோபோட்டிக் கருவிகள் மூலம்...

இந்த அதிநவீன ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மையம் மூலம் டாக்டர்கள் கடினமான அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாக ரோபோடிக் கருவிகள் கொண்டு மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். அறுவை சிகிச்சையின் போது உறுப்புகளை அகற்ற நேரிட்டால் அவற்றின் ரத்த நாளங்களின் ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி, உறுப்புகளை அகற்ற இந்த நவீன ரோபாட்டிக் அறுவை சிகிச்சை உதவியாக இருக்கும்.

ரோபோடிக் அறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் உடம்பில் சிறிய தழும்புகளே ஏற்படுவதால், ரத்த இழப்பு, வலி மற்றும் நோய்த்தொற்று குறைவதோடு, அறுவை சிகிச்சைக்கு பின் வலி நிவாரண ஊசிகள் அதிகம் தேவைப்படுவதில்லை. மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பலாம். சிறுநீரகம், குடல்நோய், புற்றுநோய், நாளமில்லா சுரப்பி, இதயம் உள்ளிட்ட உறுப்புகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இந்த அதிநவீன மையம் பயன்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com