

சென்னை,
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கான அனுமதி காலம் முடிந்த நிலையில், அவற்றை மீண்டும் தனியாருக்கு டெண்டர் மூலம் வழங்குவதற்கான புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை நடத்துவதற்கான அங்கீகாரம் தனியார் தரப்பினருக்கு ஒப்பந்தப்புள்ளி மூலம் வழங்கலாம். இதற்காக ஒப்பந்தப்புள்ளி நடத்தப்பட்டு, அதில் அதிக தொகையை வழங்கும் தகுதியான நபர் அல்லது நிறுவனம் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் நபருக்கு பார் நடத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்த பார், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடையில் இருந்து 100 மீட்டருக்குள் பார் அமைக்கப்பட வேண்டும். பார் அமைக்கப்படும் இடத்துக்கு குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் (215 சதுர அடி) பரப்பளவு இருக்க வேண்டும். அங்கு குடிநீர் மற்றும் கைகளை கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும், மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிலும் பார் அமைக்க வேண்டும். பார் அமைக்கப்படும் இடத்துக்கு மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த இடம் விதிகளுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்த பிறகே அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். பார்களில் 21 வயதுக்கு குறைவானவர்கள் மதுபானம் அருந்த அனுமதிக்கக்கூடாது. மேலும், பார்கள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அரசு அறிவிக்கும் மதுபான விற்பனை இல்லாத நாட்களிலும் பார் செயல்படக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.