

சென்னை,
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 2 கிலோ கோதுமை மாவை பாக்கெட்டுகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில், குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதிலாக கோதுமையை பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் கார்டுதாரர்களுக்கு மாதம் அதிகபட்சம் 10 கிலோ கோதுமையும், மற்ற பகுதிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு மாதந்தோறும் 30 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்கிறது.
இதற்கிடையே, வெளிச்சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் கோதுமை மாவை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், பலர் இரவு உணவில் அரிசி சாதத்துக்கு பதிலாக சப்பாத்தியை விரும்பி சாப்பிடுகின்றனர். இதையடுத்து, ரேஷன் கடைகளிலேயே கோதுமை மாவை பாக்கெட்டுகளில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து கோதுமையை பெற்று, தனியார் மாவு ஆலைகளில் அரைத்து பாக்கெட்டுகளில் விநியோகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கார்டுதாரர்களுக்கு தலா 2 கிலோ கோதுமை மாவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.15 என்ற விலையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.