

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம், வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ.3 கோடிக்கும் அதிக மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடம் 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டிக் கிடப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களின் வசதிக்காக, நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ் ரூ.3 கோடியே 6 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் 13 புதிய நவீன வகுப்பறைகளுடன் கூடிய பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து 6 மாதங்களாகின்றன.
புதிய கட்டிடம் தயாராக உள்ள நிலையிலும், அது இன்னும் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி, 35 ஆண்டுகள் பழமையான, பாதுகாப்பற்ற பழைய கட்டிடத்திலேயே மாணவர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தின் கூரைகளும் சுவர்களும் எப்போது இடிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில் உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினசரி அச்சத்திலேயே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
"புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் ஏன் திறக்காமல் தள்ளிப் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன், மாவட்ட நிர்வாகமும் பள்ளி கல்வித்துறையும் உடனடியாக தலையிட்டு இப்புதிய கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும்" எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.