

போடிப்பட்டி,
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில், அதன் அருகிலேயே புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.
குறிப்பாக, பழனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், இருக்கை வசதி இல்லாமல் கால் கடுக்க காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி பிரசுரமானது. அதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கை வசதி அமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.