

நெல்லை,
வற்றாத ஜீவநதியாக பாய்ந்தோடும் தாமிரபரணி நதி, அதன் கிளை நதிகள் மற்றும் 1,208 குளங்கள் மூலம் செழித்து காணப்படுகிறது நெல்லை மாவட்டம். தற்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருவது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவின் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கப்பட்ட இணையதள பக்கத்தில், நீர்நிலைகள் குறித்து டிஜிட்டல் முறையில் அட்லஸ் மேப்பிங் எனப்படும் வரையறை செய்யப்பட்டுள்ளது. நெல்லை நீர்வளம் என்ற திட்டத்தின் மூலம் குளங்களை தூர்வாரும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 4 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 குளங்களை தூர்வாரும் பணிகள் தன்னார்வலர்களின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இதுதவிர அனுமன் நதிநீர் வழிப்பாதை சரிசெய்யப்பட்டு 49 குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மரங்கள், குளங்கள், நீர்நிலைகள், நெடுஞ்சாலைகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றை கணக்கெடுப்பு செய்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தும் புது முயற்சியும் கையாளப்படுகிறது. வெள்ளநீர் தேங்குவது குறித்து புகார் தெரிவிக்க புதிதாக வாட்டர் லாக்கிங் என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் புகார் தெரிவித்த உடன் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட இடம் மேப்பில் குறிப்பிடப்படும்.
இதையடுத்து அனைத்து துறை உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட வாட்ஸ்-ஆப் குழு மூலம் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. சமீபத்தில் பருவமழை காரணமாக நெல்லையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது குறித்து வந்த 250 புகார்களுக்கு இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டதாக வட்டாட்சியர் செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தவிர ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மூலம் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வருவதால் நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.